மாணவர்களுக்கு முன்கூட்டியே விடப்படும் கோடை விடுமுறை!
தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் ஒன்பதாம் தேதி முதல் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் தேர்வுகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 7-ஆம் தேதி தமிழ் மொழிப் பாடத்திற்கான தேர்வு நடைபெறவுள்ளது.
எட்டாம் தேதி விருப்ப மொழிப் பாடம், ஒன்பதாம் தேதி ஆங்கிலம், 11-ஆம் தேதி கணக்கு பாடங்களுக்கான தேர்வு நடத்தப்படவுள்ளது. இதனை தொடர்ந்து நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல்15-ஆம் தேதி அறிவியல் மற்றும் 16-ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வும் நடத்தப்படவுள்ளது.