கோடை வெப்பத்தை தணித்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பரவாக்கோட்டை, சவளக்காரன், காரிகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தததால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
புதுக்கோட்டை நகர்ப்பகுதி உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவரங்குளம், வம்பன், ஆலங்குடி, பாச்சிக்கோட்டை, கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழகாஞ்சரங்குளம், எட்டிசேரி, சித்திரங்குடி, மொச்சிகுளம், புல்வாய்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான பாளையம்பட்டி, காந்திநகர், கஞ்சநாயக்கன்பட்டி, அத்திப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை பெய்தது. தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக புது தெருவை சேர்ந்த பிரைட்டன் என்பவரின் 30 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்தது. விபத்தில் வீட்டுக்குள் இருந்த குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, சோபா மற்றும் பிற மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்தன.