“சுஜித் சடலமாக மீட்கப்பட்ட செய்தி மனவேதனை அளிக்கிறது”- முதலமைச்சர் இரங்கல்
குழந்தை சுஜித் வில்சன் சடலமாக மீட்கப்பட்ட செய்தி மிகவும் மனவேதனை அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ஆழ்துளைக் கிணறு அமைக்கும்போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 25-ஆம் தேதி சுஜித் வில்சன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்ததாக கிடைத்த செய்தி மிகுந்த மனவேதனை அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். குழந்தையை உயிருடன் மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோருக்கும், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், திருச்சி மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனது உத்தரவின்பேரில் இரவு பகலாக மீட்புப்பணிகள் நடந்ததாகவும், மீட்புப்பணிகளில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இருந்தும் குழந்தை சுஜித் வில்சன், சடலமாக மீட்கப்பட்டான் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளித்ததாக அறிக்கையில் கூறியுள்ளார். ஆழ்துளைக் கிணறு அமைக்கும்போது கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்து அரசிதழில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
வருங்காலங்களில் இதுபோன்ற துயரச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தங்கள் நிலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பவர்கள் அவற்றை மூடும்போது பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மீட்புப்பணியில் இரவு பகலாக ஈடுபட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர், சுஜித் வில்சனின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.

