கைதிகள் பயிரிட்டு அறுவடை செய்த கரும்புகள்! திருச்சி மத்திய சிறை அங்காடியில் அமோக விற்பனை

கைதிகள் பயிரிட்டு அறுவடை செய்த கரும்புகள்! திருச்சி மத்திய சிறை அங்காடியில் அமோக விற்பனை
கைதிகள் பயிரிட்டு அறுவடை செய்த கரும்புகள்! திருச்சி மத்திய சிறை அங்காடியில் அமோக விற்பனை

திருச்சி மத்திய சிறையில் சிறை கைதிகளால் பயிரிடப்பட்ட கரும்புகள் சிறை அங்காடியில் விற்பனை செய்யப்பட்டது. குறைந்த விலையில் விற்கப்படுவதால், பொதுமக்கள் பலரும் கரும்பை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இதனால் கைதிகள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறை கைதிகளால் இனிப்புகள், கைவினைப் பொருட்கள், காய்கறி, பழங்கள், வெங்காயம் உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது. சிறையில் உள்ள நன்னடத்தை கைதிகளைக் கொண்டு சிறை தோட்டத்தில் பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு பயிரிடப்படுவதும் வழக்கம். அந்தவகையில் அங்கு ஒவ்வொரு ஆண்டும் 5 ஏக்கர் வரை பயிரிடப்பட்ட கரும்புகள் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படும் நிலையில், கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இரண்டு ஏக்கரில் மட்டுமே கரும்பு பயிரிடப்பட்டது.

எந்த ஒரு செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தாமல், முற்றிலும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி ஆர்கானிக் முறையில் பயிரிடப்பட்ட கரும்புகள், தற்போது அறுவடை செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறை அங்காடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இயற்கை முறையில் பயிரிடப்பட்ட கரும்பு என்பதாலும், கரும்புகள் நன்றாக செழித்து வளர்ந்துள்ளதாலும் மக்கள் ஆர்வத்துடன் கரும்புகளை வாங்கி செல்கின்றனர். குறிப்பாக 10 கரும்புகள் அடங்கிய ஒரு கட்டு கரும்பு 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், பொங்கல் பண்டிகைக்காக சீர்வரிசை செய்வதற்காகவும், பொதுமக்கள் கரும்பினை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

பொங்கல் பண்டிகைக்காக கரும்பு வாங்க விரும்பும் மக்கள் சிறை அங்காடியில் விற்பனை செய்யும் கரும்புகளை வாங்கி பயன்பெறலாம் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் கிடைக்கும் வருமானம் சிறைக்கைதிகளுக்கு ஊதியமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிருந்தா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com