வேலூர்: டபுள் டக்கர் ரயில் பெட்டியில் திடீர் புகை வந்தது ஏன்? என்ன நடந்தது?

டபுள் டக்கர் ரயில் பெட்டியில் இருந்து திடீர் புகை வந்ததால், ரயில் பாதியிலேயே நின்றது. 6 பெட்டியின் பிரேக் பைண்டிங் ஆனதால் வண்டியில் இருந்து புகை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் வண்டி எண் 22625 ஏசி டபுள் டக்கர் பயணிகள் விரைவு ரயில் இன்று காலை சுமார் 9:30 மணி அளவில் காட்பாடி ரயில் நிலையத்தை தாண்டி விரிஞ்சிபுரம் குடியாத்தம் இடையே சென்று கொண்டிருக்கும்போது, ரயிலின் C-6 பெட்டியில் திடீரென புகை ஏற்பட்டுள்ளது.

முதலில் சிறியதாக ஏற்பட்ட புகை பிறகு மளமளவென அதிகப்படியாக எழுந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ரயில் சம்பவ இடத்திலேயே நிறுத்தப்பட்டு புகை எழுந்ததற்கான காரணம் கண்டறியப்பட்டது. பின் காரணம் சரிசெய்யப்பட்டு, ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் சுமார் 12 நிமிடங்கள் தாமதமாக ரயில் சென்றது.

புகை எழுந்த சம்பவத்தில் பயணிகளுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் ரயில் அடுத்தடுத்த நிறுத்தங்களில் நிறுத்தப்பட்டு தொழில்நுட்ப வல்லுனர்களால் புகை ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டது. அதன் காரணமாக சம்பவத்துக்குப்பின் தடையின்றி பெங்களூர் நோக்கி சென்றது ரயில்.

டபுள் டக்கர் ரயிலில் திடீர் புகையால் பரபரப்பு
டபுள் டக்கர் ரயிலில் திடீர் புகையால் பரபரப்பு

புகை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஜோலார்பேட்டை இருப்பு பாதை காவல்துறையினர் தெரிவிக்கையில், “6 பெட்டியின் பிரேக் பைண்டிங் ஆனதால் வண்டியில் இருந்து புகை ஏற்பட்டது. இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை” என்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com