தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் போது இடி தாக்கி 11 ஆம் வகுப்பு மாணவி உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் அதி தீவிர மழையும் பெய்தது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த புதுமாப்பிள்ளை ஒருவர் இடி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கத்தை அடுத்த நேமலூரில் சந்திரன் என்ற விவசாயியும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற ஆனந்தன் என்ற மீனவரும் இடி தாக்கி மரணமடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயற்கை உபாதைக்கு வெளியில் சென்ற மகாலட்சுமி என்ற 11 ஆம் வகுப்பு மாணவி இடி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
உடன் சென்ற தோழியும் படுகாயமடைந்தார். இதே போல் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் பெருமாள் என்பவர் மீது தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.