கரூரில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி திடீர் மரணம்
கரூரில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் பரமத்தி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தவர் ஜெயந்தி ராணி. இவரிடம் மனை வரன்முறை செய்வதற்காக ரமேஷ் என்பவர் விண்ணப்பித்திருந்தார். அப்போது ஜெயந்தி ராணி, 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ் இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவப்பட்ட 30 ஆயிரம் பணத்தை ரமேஷ் நேற்று மாலை ஜெயந்திராணியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயந்தி ராணியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர், கரூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மலர்விழி முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர். இரவு நேரமானதால் காலையில் வந்து ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயந்தி ராணியை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது உடல்நிலை குறைவால் ஜெயந்தி ராணி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவர் நெஞ்சுவலியால் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் கரூர் மாவட்ட போலீசார் மற்றும் அரசு அலுவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.