லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடிப்பட்ட சார் பதிவாளர் !
லஞ்சம் பெற்றதாக சென்னை மயிலாப்பூர் சார் பதிவாளர் கைது செய்யப்பட்டார்.
வீட்டு பத்திரப் பதிவுக்காக சார்பதிவாளர் முத்துக்கண்ணன் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார் வந்தது. இதையடுத்து மருத்துவர் ஒருவரிடம் இருந்து முத்துக்கண்ணன் பணத்தை வாங்கும் போது, கையும் களவுமாக அவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
மேலும் இடைத்தரகராக செயல்பட்ட பிரபுல்லா சந்திரன் என்பரும் கைது செய்யப்பட்டார். இதே போல் கொரட்டூர், சைதாப்பேட்டை, திருச்சி சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத சுமார் 6 லட்சத்து 30 ஆயிரம் பணத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த சோதனையில் லஞ்ச ஊழல் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பாஸ்கரன் மற்றும் டிஎஸ்பி குமரகுருபரன் தலைமையில் ஆறு இன்ஸ்பெக்டர் உட்பட 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும் அது குறித்த முழு தகவல் சோதனை நிறைவடைந்த பின்பே தெரிய வரும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.