சிஆர்பிஎஃப் தேர்வு மையம் ஒன்றுகூட தமிழகத்தில் இல்லை- அரசுக்கு கடிதம் எழுதிய சு. வெங்கடேசன்

சிஆர்பிஎஃப் தேர்வு மையம் ஒன்றுகூட தமிழகத்தில் இல்லை- அரசுக்கு கடிதம் எழுதிய சு. வெங்கடேசன்
சிஆர்பிஎஃப் தேர்வு மையம் ஒன்றுகூட தமிழகத்தில் இல்லை- அரசுக்கு கடிதம் எழுதிய சு. வெங்கடேசன்

மத்திய ரிசர்வ் காவல் படை( CRPF) தேர்வுக்கான மையம் ஒன்றுகூட தமிழகத்தில் இல்லை என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர், மற்றும் சிஆர்பி எஃப் இயக்குனருக்கு அவர் எழுதிய கடிதத்தில், “மத்திய ரிசர்வ் காவல் படையின்( CRPF) துணை மருத்துவப் பணிகளுக்கான நியமனங்களுக்காக தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்துள்ளவர்களின் பிரச்னையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன்.

மத்திய ரிசர்வ் காவல் படை 24 துணை மருத்துவப் பணிகளுக்கான நியமனத் தேர்வு முறைமைக்கான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது குரூப் "பி" மற்றும் குரூப் "சி" அமைச்சுப் பணி அல்லாத (Non ministerial), பதிவிதழில் இடம் பெறாத, மோதல் முனைகளில் பணி புரிகிற அகில இந்தியப் பணிகளுக்கானவை ஆகும்.

விண்ணப்பத்திற்கான கடைசி நாள் 31.08.2020 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்த காலியிடங்கள் 780ஐ விட அதிகம். எழுத்து தேர்வு 20.12.2020 என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கையில் தேர்வு மையங்கள் 9 இடங்களில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 5 வட மாநிலங்களிலும், 2 தென் மாநிலங்களிலும், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தலா 1 இடமும் அமைந்துள்ளன. வட மாநிலங்களில் 5 மையங்கள் அமைந்திருப்பதில் தவறில்லை. ஆனால் சமத்துவ அணுகுமுறை இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு இல்லை என்பதே பிரச்னை.

தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரு தேர்வு மையம் கூட இல்லை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய சமத்துவமற்ற பங்களிப்பு, தமிழக, புதுச்சேரி விண்ணப்பதாரர்களை மிகப் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கும். அதிலும் குறிப்பாக இன்றைய கோவிட் 19 சூழல், மக்களின் நகர்வுகளுக்கு இருக்கிற பிரச்சினைகள் ஆகிய பின் புலத்தில் மேற்கண்ட பணிகளுக்கான போட்டியில் ஈடுபடுவதற்கான தடைகளாக மாறக் கூடாது.

ஆகவே, தேர்வு மையங்களை அதிகரித்து இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கான சம பகிர்வை உறுதி செய்ய வேண்டுகிறேன். தமிழ்நாடு, புதுச்சேரி விண்ணப்பதாரர்களின் நலன் கருதி குறைந்த பட்சம் ஒரு மையத்தை இவ்விரு பகுதிகளிலும் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தற்போது விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஏற்கெனவே முடிந்து விட்ட நிலையில் மறு அறிவிக்கை வெளியிட்டு, மாற்றங்களின் காரணமாக, அதன் தேதியிலிருந்து கூடுதல் ஒரு மாத அவகாசம் வழங்கி புதிய விண்ணப்பங்களையும் வரவேற்குமாறு வேண்டுகிறேன். இப்பிரச்சினையின் நியாயத்தை ஏற்று சாதகமான முடிவை விரைவில் எடுக்குமாறு வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com