சென்னையை அடுத்த பட்டரவாக்கத்தில் அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதன் எதிரொலியாக புறநகர் ரயில்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக ரயில்வே காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே காவல்துறை ஆய்வாளர் அழகர்சாமி, வன்முறை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 3 பேரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
புறநகர் ரயில்களிலும், ரயில்நிலையங்களிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 7 குழுக்கள் மூலம் புறநகர் ரயில்களில் கண்காணிப்புப்பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். ரயில்களில் சாதாரண உடைகளிலும் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், வன்முறை உள்ளிட்ட புகார் தொடர்பாக 182 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே காவல் ஆய்வாளர் எச்சரித்தார்.