தீயில் சிக்கிய மாணவ- மாணவியர்கள்: மீட்புப் பணியில் சிக்கல்
தேனி அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பல மாணவ-மாணவிகள் சிக்கியுள்ளனர். இரவு நேரம் என்பதால் அவர்களை மீட்கும் பணியிலும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மலையேறும் பயிற்சி
மேற்கொண்டனர். அப்போது ஏற்பட்ட காட்டுத் தீயில், அனைத்து மாணவ- மாணவிகளும் தீயில் சிக்கினர். இதையடுத்து மாணவிகளை மீட்கும்பொருட்டு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காட்டுத்தீயில் மாணவிகள் சிக்கிய பகுதிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரைந்துள்ளார். அத்துடன் தேனி மாவட்ட ஆட்சியரும் விரைந்துள்ளார். அதுமட்டுமின்றி தீயணைப்பு, வனத்துறையினர், போலீஸாருடன் கிராம மக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சிக்கிய மாணவிகள் அனைவரும் கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவிகள் என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே தீக்காயத்துடன் சில மாணவ- மாணவியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் இன்னும் 20-க்கும் மேற்பட்டோர் தீயில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரவு நேரம் என்பதால் அவர்களை மீட்கும் பணியிலும் சிக்கல் நிலவுவதாக தெரிகிறது. தீயை அணைக்கும் பணி ஹெலிகாப்டர்கள் மூலம் நடைபெறும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தீக்காயத்தோடு மீட்கப்பட்டவர்கள் டோலி மூலம் மலையிலிருந்து கீழ் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.