தேனி மாவட்டம் குரங்கணியில் தீயில் உயிரிழந்தவர்களை மீட்க வந்த ஹெலிகாப்டருடன் ஆசிரியர் பயிற்சி மாணவியர் செல்ஃபி எடுத்துக்கொண்டது காண்போரை முகம் சுளிக்க வைத்தது.
தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி மலையேற்றம் சென்றவர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதவிர பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரவு முழுக்க தீயில் சிக்கி துடித்த அவர்களை மீட்க ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் போடி ஸ்பைசஸ் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டது. இதனைக் கண்ட ஆசியர் பயிற்சி மாணவியர் அங்கிருந்த ஹெலிகாப்டரை நோக்கி வரிசையாகச் சென்றனர். பின்னர் படபடவென ஹெலிகாப்டரின் அருகில் நின்றுகொண்டு செல்ஃபி எடுக்கத் துவங்கினர். சில மாணவியர் தனிப்படமும், சில மாணவியர்கள் தோழிகளுடனும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஒரு சிலரோ ஆசிரியர்களோடு நின்று செல்ஃபி எடுத்து சந்தோஷம் கொண்டனர்.
தீக்காயம் அடைந்தவர்களுக்கு உதவ செல்கிறார்கள் என கூடியிருந்தோர் கருதிய நிலையில் அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. உயிருக்கு போராடியவர்களை மீட்கவந்த ஹெலிகாப்டர் அருகே நின்று மாணவியர் செல்பி எடுத்ததை பார்த்த பொதுமக்களும் மிகவும் எரிச்சலடைந்தனர்.