3-வது நாளாக தொடர்கிறது போராட்டம்... மாணவர்கள் ரயில் மறியல்
டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உண்ணாவிரதத்தில் மயக்கம் அடைந்த மாணவர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மாணவர்களில் ஒரு பகுதியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர் விடுதியில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். விவசாயிகள் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக அவர்கள் கூறியுள்ளனர்.
உண்ணாவிரதத்தில் மயக்கம் அடைந்த மாணவர் ஒருவருக்கு அரசு மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, சட்டக்கல்லூரி மாணவர்களின் ஒருபகுதியினர், கோட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் காரணமாக மின்சார ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.