ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரையில் சமூக வலைதளம் மூலமாக ஒன்றிணைந்த மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
பொங்கல் பண்டிகைக்கு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரையில் சமூக வலைதளம் மூலமாக ஒன்றிணைந்த மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. மதுரை தமுக்க மைதானத்திலிருந்து தொடங்கிய பேரணி, கோரிப்பாளையம் சந்திப்பு, பனகல்சாலை வழியாக திருவள்ளுவர் சிலை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தது. இதில் இளைஞர்கள், பெண்கள், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டனர். நாளை அவனியாபுரத்தில் போராட்டம் நடக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.