மாணவர்களை தாக்கியதாக மருத்துவர்கள் மீது புகார்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மருத்துவமனையில், கல்லூரி மாணவர்களை அறையில் பூட்டி வைத்து மருத்துவர்கள் அடித்து உதைத்ததாகப் புகார் எழுந்துள்ளது.
தக்கலை அருகே இரவிபுதூர்கடை செறுகோல் பகுதியை சேர்ந்த வில்சன் மகன் அஜீஸ். இவரது நண்பர் புலிப்பனம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அஜிகுமார். இருவரும் சுங்கான்கடை தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகின்றனர்.
வழக்கம்போல் கல்லூரிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக் பரைக்கோடு அருகே செல்லும்போது அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி மீது மோதியது. இதில், மூவரும் காயமடைந்த நிலையில் அவர்களை அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அஜீசுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக, சக மாணவர்களான அசுவின், ஜினோ ஆகியோரால் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, அவசர சிகிச்சைப் பிரிவில் மாணவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் எல்லை மீறியதால் அந்த மாணவர்களை அறையில் பூட்டி வைத்து மருத்துவர்களும், ஊழியர்களும் அடித்து உதைத்ததாகப் புகார் கூறப்படுகிறது. இதனிடையே, மாணவர்கள் தகராறு செய்ததாக, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தக்கலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே வேளையில், சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தால் மருத்துவர்கள் தாக்கியது தெரியவரும் என மாணவர்கள் கூறுகின்றனர்.