பேருந்தில் பட்டா கத்தியுடன் அராஜகம்.. மாணவர்களை தேடும் காவல்துறை

பேருந்தில் பட்டா கத்தியுடன் அராஜகம்.. மாணவர்களை தேடும் காவல்துறை

பேருந்தில் பட்டா கத்தியுடன் அராஜகம்.. மாணவர்களை தேடும் காவல்துறை
Published on

சென்னையில் திரைப்பட ஆக்சன் காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு ஓடும் பேருந்தில் கல்லூரி மாண‌வர்கள் சிலர் பட்டா கத்திகளுடன் அராஜகம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி‌ உள்ளன. இந்தச் சம்பவம் நடந்த இடம் வண்ணாரப்பேட்டை எனத் தெரியவந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்குன்றம் அருகே உள்ள காரனோடையில் இருந்து பாரிமுனைக்கு செல்லும் 57 F பேருந்தில், படிக்கட்டில்‌ பயணிக்கும் மாணவர்கள் சிலர், நீண்ட பட்டா கத்திகளை வைத்துக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் காட்சி வெளியாகி உள்ளது. முகமூடி அணிந்தும், அணியாமலுமாக பேருந்தின் முன்பக்கம், பின்பக்க படிகளில் தொங்கியபடி இந்த மாணவர்கள், நீளமான கத்திகளை, ஓடும் பேருந்தில் இருந்தபடி ‌தரையில் தேய்த்தும், பட்டா கத்தியை சுழற்றியும் அராஜகம் செய்த‌னர். கத்திகள் எழுப்பும் சப்தம், மாணவர்களின் குரல் அனைத்தும், பேருந்தில் இருந்தவர்களையும், பாதசாரிகளையும் அச்சப்படுத்தும் விதமாக இருந்தது.

இந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய காவல்துறையினர், இது எங்கு நடந்தது என்று ஆராய்ந்தனர். சம்பவம் நடந்த சமயத்தில், வண்ணாரப்பேட்டை மின்ட் மேம்பாலம் அருகே பேருந்து பயணப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து பேருந்தில் கத்திகளுடன் பயணித்த மாணவர்கள் யார்? ‌எந்தக் கல்லூரியை சேர்ந்தவர்கள், பேருந்தின் ஓட்டுநர்‌ நடத்துநர் யார் என்ற கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியில் வண்ணாரப்பேட்டை‌ காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் மாநிலக் கல்லூரிக்கு ஜே என்ற வாழ்த்து முழக்கங்களை எழுப்பியதால், மாநிலக்கல்லூரி மாணவர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, கத்தியுடன் பயணித்த மாணவர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், தகுந்த விசாரணைக்குப்பின் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு முடிவெடுக்கும் என்றும் மாநிலக்கல்லூரி முதல்வர் ராவணன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சம்பவம் நடந்த பேருந்து வழித்தடம் பற்றிய விவரம் விசாரிக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் இதேபோல, பதினைந்துக்கும் அதிகமான மாணவர்கள், மற்றொரு குழுவைச் சேர்ந்த மாணவர்களை சுற்றி வளைத்து அரிவாள், கத்திகளைக் கொண்டு தாக்கினர். இதில் 3 பேர் அரிவாள் வெட்டு பட்டனர்‌. கத்திகளுடன் இருந்த மாணவர்கள் மற்ற பயணிகளையும் மிரட்டிய சம்பவம் நடந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதியும் நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் கத்திகளுடன் வந்து சில மாண‌வர்கள் அனைவரையும் மிரள வைத்தனர்.

படிக்கும் பருவத்தில் கத்திகளுடன் பொது இடங்களில் மக்களை அச்சுறுத்தும் விதத்தில் ந‌டந்து கொள்ளும் மாணவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தாலும், இதுபோன்ற அத்துமீறல்களும், அராஜகங்களும் தொடர்கதையாகி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com