புதுக்கோட்டை: பள்ளிக்கு சென்ற மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு - உறவினர்கள் சாலைமறியல்

புதுக்கோட்டை: பள்ளிக்கு சென்ற மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு - உறவினர்கள் சாலைமறியல்

புதுக்கோட்டை: பள்ளிக்கு சென்ற மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு - உறவினர்கள் சாலைமறியல்
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 4ஆம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்ததையடுத்து உயிரிழந்த நிலையில் பெற்றோர், உறவினர் மற்றும் சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாப்பான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் நாடிமுத்து. லாரி ஓட்டுநரான இவருக்கு போதினி என்ற மனைவியும், கிருஷ்ணவேணி என்ற மகளும், நிதிஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். இவரது மகள் கிருஷ்ணவேணி பாப்பான்விடுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரக்கூடிய நிலையில், 9 வயதான நிதிஷ்குமார் அதே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு வந்த மாணவன் நிதிஷ்குமாருக்கு நேற்று மாலை வகுப்பறையில் இருந்தபோது திடீரென மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அந்த மாணவனின் வகுப்பறை ஆசிரியர் ஆரோக்கியம், உடனடியாக மாணவனை அழைத்துக் கொண்டுபோய் அவர் வீட்டில் விட்டுள்ளார். அந்த நேரத்தில் நிதிஷ்குமாரின் பாட்டி மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். அவரது தாய் மற்றும் தந்தை பணிக்காக சென்றுள்ளனர். அதனால் நிதிஷ்குமாரின் தந்தை நாடிமுத்துவுக்கு செல்போன் மூலம் ஆசிரியர் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த மாணவனை அவரது பாட்டி மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக ஆலங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர், உடனடியாக மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அந்த மாணவன் உயிரிழந்துள்ளார். மாணவனின் உயிரிழப்புக்கான காரணம் தெரியாத நிலையில், தற்போது மாணவனின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாணவனின் உயிரிழப்புக்கு காரணம் கேட்டு அக்கிராம மக்கள் பள்ளியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த ஆலங்குடி போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டு விளக்கம் அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதனால் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்ற நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் அந்த பள்ளி வளாகத்தில் ஒரு நல்ல பாம்பு சுற்றி திரிவதை பார்த்த அக்கிராம மக்கள் அதனை அடித்துள்ளனர். பள்ளி வளாகத்தில் பாம்பு அடிக்கப்பட் சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் வீட்டிலிருந்து பள்ளிக்கு நன்றாக வந்த மாணவனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மாணவனின் உயிரிழப்புக்கு முறையான காரணத்தை பள்ளி நிர்வாகமும் மருத்துவர்களும் தெரிவிக்க வேண்டுமெனவும் மாணவனின் தந்தை நாடிமுத்து ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை முதலே மாணவன் உடல் உள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவனின் உறவினர்கள் கிராம மக்கள் மற்றும் சக மாணவர்கள் குவிய தொடங்கினர். தற்போது மாணவனின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாணவனின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவேண்டும் என்று கேட்டிருந்த நிலையில் மாணவனின் பெற்றோர்களிடம் வருவாய்த்துறையினர், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மாணவனின் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் சக மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், முள்ளூர் விளக்கு என்னும் இடத்தில் மாலை 4 மணிமுதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

விஷப்பூச்சி கடித்ததில்தான் மாணவர் உயிரிழந்துள்ளான் என்றும், அவனுக்கு என்ன மாதிரியான விஷப்பூச்சி கடித்தது என்பதை அறிவதற்காக காயம் உள்ள இடத்தை திருச்சியில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளதாகவும், அதன் பின்பே அது குறித்த விவரம் தெரியவரும் என்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தரப்பில் புதிய தலைமுறைக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com