கணவர் இல்லை.. கூலி வேலை செய்து மகளை படிக்கவைத்த தாய்.. நீட் தேர்வில் சாதித்த மாணவி.! உதவுமா அரசு?

தந்தையை இழந்த நிலையில் தாயாரின் கூலி வேலையில் கிடைக்கும் வருமானத்தில் மூன்றாண்டுகள் கடுமையாக படித்து நீட் தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார் மாணவி சுஜிதா.

ரம்மியமான மலைப்பகுதிகளுக்கு நடுவே எழில் கொஞ்சும் சிறிய மலைக்கிராமம்தான் கொடைக்கானல் அருகே உள்ள மேல்பள்ளம். இக்கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், லோகராணி தம்பதியினருக்கு பிறந்த இரண்டு மகள்களில் இளைய மகள் சுஜிதா. இவர் தந்தையின் சொந்த ஊர் மேல்பள்ளம். தாயாரின் சொந்த ஊர் சாலையே இல்லாத வெள்ளக்கெவி கிராமம்.

தன் பள்ளிப் பருவ காலத்தில் இருந்து, வெள்ளக்கெவி கிராம மக்கள் மருத்துவ சிகிச்சைக்கு, 8 கி.மீ. தொலைவு நடந்து கொடைக்கானலிலோ அல்லது சமவெளி நகரமான பெரியகுளத்திற்கோ சென்று மருத்துவம் பார்க்கும் நிலையை கண்டு வளர்ந்துள்ளார் சுஜிதா. அதன் வலி நிறைந்த தாக்கத்தால், அவர் மலைவாழ் கிராம மக்களுக்கு, மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளார். இதற்காக பள்ளி பருவத்தில் இருந்தே மருத்துவப் படிப்பில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். அவரது தந்தையும் அவருக்கு தேவையான ஊக்கத்தை கொடுத்து, 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் நீட் தேர்வெழுத பக்க பலமாக இருந்து வந்துள்ளார்.

மாணவி சுஜிதா
மாணவி சுஜிதா

12ஆம் வகுப்பு முடிந்து, முதல் முறை சுஜிதா நீட் தேர்வெழுதும் வரை, அவரது தந்தை உடன் இருந்துள்ளார். இரண்டாம் ஆண்டு உடல் நலம் குன்றி, மகளின் மருத்துவ கனவுகளை நெஞ்சில் சுமந்தவாறு இறந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி கலந்த சோகத்துடன் உறைந்த சுஜிதா, இரண்டாம் ஆண்டு நீட் தேர்வை சரியாக எழுதாமல் கலக்கத்தில் இருந்துள்ளார். தந்தை இறந்து தங்களை விட்டு பிரிந்ததால், தனக்கு எதற்கு மருத்துவப் படிப்பு என மனம் விட்ட நிலையில், அவரது தாயார், மகள் சுஜிதாவை ஊக்கப்படுத்தி, தந்தை பிரிந்தாலும், அவர் கனவு நனவாக வேண்டும் என மகளுக்கு பக்கபலமாக இருந்துள்ளார். இதற்காக கூலி வேலைக்கு சென்று, ஈட்டும் பொருளாதாரம் அனைத்தையும் நீட் தேர்வு பயிற்சிக்கு செலவழித்து, மூன்றாவது முறையாக சுஜிதா நீட் தேர்வெழுதி நல்ல மதிப்பெண் எடுக்க பெரும் பங்காற்றியுள்ளார். அவரது விடா முயற்சியில் மூன்றாவது முறை எழுதிய நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, அரசு இடஒதுக்கீட்டில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார் சுஜிதா.

சுஜிதாவின் தாயார், கைவசம் இருந்த சிறு சேமிப்பு, நகைகள் என, அனைத்து பொருளாதாரத்தையும் விற்று, நீட் தேர்வு பயிற்சிக்காக செலவழித்து, மருத்துவப் படிப்பிற்கு கட்டணம் கட்டியுள்ளார். தன் மகள் மருத்துவராகி மலைவாழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற பெருங்கனவுடன் உள்ளார் சுஜிதாவின் தாய். சுஜிதா 5 ஆண்டு மருத்துவம் படிக்க தேவையான பொருளாதாரத்திற்கு, தான் கடும் உழைப்பை கொடுக்க தயாராக இருந்தாலும், ஒருபக்கம் அச்சத்துடனே உள்ளதாக கூறுகிறார் அந்தத் தாய். தாயார் லோக ராணிக்கு அழுத்தங்கள் இருந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல், எப்பாடுபட்டாவது மகளை மருத்துவராக்கி மலை வாழ் மக்களுக்கு சேவை செய்யவைக்கவேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார். அதற்கு அவரை தயார் படுத்துவதே, தனது முதல் கடமையெனக்கூறி சுஜிதாவின் தாயார் செயல்பட்டு வருகிறார்.

மாணவி சுஜிதா
மாணவி சுஜிதா

மிகவும் பிற்படுத்தப்பட்ட மலைவாழ் சமூகத்தில் பிறந்து, சாலையே இல்லாத வெள்ளக்கெவி கிராமத்தில் வளர்ந்து, பெரியகுளம் சென்று பள்ளி கல்வியை முடித்து, அடர் வனத்திற்குள் கடைக்கோடி கிராமமான மேல்பள்ளத்தில் வசித்து மூன்று ஆண்டுகள் நீட் தேர்வெழுதியுள்ளார் சுஜிதா.

மருத்துவராகி, மலைக்கிராம மக்களுக்கு வீடு தேடி சென்று மருத்துவம் செய்ய வேண்டும் என்ற லட்சியக் கனவோடு உள்ள சுஜிதாவின் அக்னி சிறகுகள், மேலும் மேலும் வலுப்பெற்று விரிவடைய, அரசும், மலைவாழ் மக்களும் ஊக்கம் அளிப்பார்கள் என்ற பெரும் நம்பிக்கையுடன் மேல்பள்ளம் கிராம மக்கள் அனைவரும் சுஜிதாவின் தன்னம்பிக்கையை பாராட்டி, அவருக்கு இனிப்புகள் ஊட்டி கொண்டாடுகின்றனர். இவர்களுக்கு அரசு உதவுமா?

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com