10ஆம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து தோல்வி - மாணவர் தற்கொலை
பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நெல்லை நிகழ்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் அழகிய பாண்டியபுரத்தை சேர்ந்த மாணவன் சுரேந்தர். தந்தை இறந்து விட்டதால், தனது தாயார் மற்றும் சகோதரியுடன் இவர் வசித்து வந்தார். இவரது தாயார் பாளை சித்த மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். டுடோரியல் காலேஜ் மூலம் படித்து 10ஆம் வகுப்பு தேர்வெழுதியிருந்த சுரேந்தர் தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தார். இந்நிலையில் நேற்று வெளியான தேர்வு முடிவுகளில் இந்த முறையும் அவர் தோல்வியைத் தழுவினார்.
இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று நெல்லை சேந்திமங்கலம் ஆற்றங்கரை அருகே உள்ள சுடுகாட்டிற்கு சென்று, அங்குள்ள மரத்தில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் அப்பகுதி மக்கள் தூக்குமாட்டி ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், அதிகாரிகள் முன்னிலையில் மாணவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா ? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.