மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் உடல் சொந்த ஊரில் அடக்கம்
டெல்லி யுசிஎம்எஸ் மருத்துவக்கல்லூரியில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த திருப்பூர் மாணவர் சரத்பிரபுவின் உடல்
அடக்கம் செய்யப்பட்டது.
டெல்லியில் பிரேதபரிசோதனை முடிந்து நள்ளிரவு அவரது உடல் திருப்பூர் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. அரசியல்
கட்சித்தலைவர்கள், மாணவர் அமைப்பினர் அஞ்சலி செலுத்திய பின் இன்று காலை 8 மணியளவில் பாரப்பாளையத்திலிருந்து 2 கிலோ
மீட்டர் நடைபெற்ற சரத்பிரபுவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தி மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சியினர்
பங்கேற்றனர். அதன்பின் இறுதிச்சடங்குகள் முடிந்து சரத்பிரபுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வெளிமாநிலங்களில் சென்று படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என மாணவர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சரத்பிரபுவின் மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தவும்
வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், மாணவர் சரத்பிரபு பொட்டாசியம் குளோரைடை ஊசி மூலம் உடலில் செலுத்தி தற்கொலை
செய்து கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சரத்பிரபு குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
தெரிவித்துள்ளார். மாணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மரணம் தொடர்பாக உரிய
விசாரணை நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என கூறினார்.