தாராசுரம்
தாராசுரம்புதியதலைமுறை

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலை தத்ரூபமாக வரைந்து அசத்திய அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்கள்!

கும்பகோணம் அருகே சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு அழைத்து வரப்பட்ட மாணவ, மாணவிகள் கோயிலில் உள்ள சோழர்கால சிற்பங்கள், கோபுரங்கள், மண்டபங்களை கண்டு வியந்து, அவற்றை தத்ரூபமாக வரைந்து அசத்தினர்.
Published on

சென்னை அரசு கவின் கலைக்கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு முதன்முறையாக வெளிப்புற வரைகலை பயிற்சி தஞ்சை மாவட்டத்தில் ஒரு வாரம் நடைபெற்று வருகிறது. இதில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலை தத்ரூபமாக வரைந்து அசத்தினர்.

தமிழகத்தில் அரசு கவின் கலை கல்லூரிகள் சென்னை மற்றும் கும்பகோணத்தில் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதில் சென்னை கல்லூரியில் வழக்கமாக இரண்டாம் அல்லது மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தான் வெளிப்புற வரைகலை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், முதன்முறையாக முதலாம் ஆண்டு மாணவர்களின் கற்பனைத் திறன்களை அறிந்து கொள்வதற்காக அக்கல்லூரி பேராசிரியர் வில்வநாதன் முன்னெடுப்பில், முதலாமாண்டு பயிலும் 87 மாணாக்கர் தஞ்சை மாவட்டத்திற்கு ஒரு வாரம் வாரகலை பயிற்சிக்காக அழைத்து வரப்பட்டனர்.

மாணவ மாணவிகள் ஒரு வாரம் வரைந்த ஓவியங்களில் சிறந்த ஓவியங்கள் அனைத்தும் தேர்வு செய்யப்பட்டு கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக பேராசிரியர் வில்வநாதன் தெரிவித்தார்.

கும்பகோணம் அருகே சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு அழைத்து வரப்பட்ட மாணவ, மாணவிகள் கோயிலில் உள்ள சோழர்கால சிற்பங்கள், கோபுரங்கள், மண்டபங்களை கண்டு வியந்து, அவற்றை தத்ரூபமாக வரைந்து அசத்தினர். இக்கோவிலில் உள்ள சிற்பங்களை பார்ப்பதற்கு அழகாகவும்,

ஆச்சரியமாகவும் இருப்பதாகவும், இவற்றை வரைவது தங்களுக்கு பெருமையாக இருப்பதாகவும் ஓவியக் கல்லூரி மாணவி ஸ்ரீதர்ஷினிபிரமிப்புடன் தெரிவித்தார்.

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், பாபராஜபுரம் கிராமம், தஞ்சை பெரிய கோயில் மற்றும் பசுமையான வயல்வெளிகள் உள்ளிட்டவைகளை பார்வையிடச் செய்து, அவர்கள் கற்பனைக்கு ஏற்ற வகையில் வரைய வைத்து பயிற்சி அளித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com