”பொதுப்பாதை அமைத்துக் கொடுங்கள்” - தலைமைப் புலவர் நக்கீரர் சிலையிடம் மனு கொடுத்த மாணவர்கள்!

பொதுப் பாதையை சீரமைத்து தரக் கோரி தேசியக் கொடி ஏந்தி ஊர்வலமாகச் சென்று தலைமைப் புலவர் நக்கீரர் சிலையிடம் பள்ளி மாணவன் மனுக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
pudhukottai
pudhukottaipt web

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் கொத்தமங்கலம் அம்புலி ஆறு அணைக்கட்டு அமைந்துள்ளது. இங்கிருந்து சேந்தன்குடி, கீரமங்கலம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி அமைந்துள்ள பெரியாத்தாள் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் அன்னதானக் காவேரி கால்வாய் தூர்வாரப்பட்டது. இதனால் கால்வாய்க்கு தெற்கு பக்கம் உள்ள வீடுகள், தோட்டங்களுக்கு செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டது.

இப்பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் இனியவன் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் படித்து வருகிறார். இவர் கால்வாயின் தெற்கு கரையில் பாதை அமைத்துத் தரக்கோரி அதிகாரிகளுக்கு பல்வேறு மனுக்கள் கொடுத்திருந்தார்.

நடவடிக்கை இல்லாத நிலையில் பல்வேறு போராட்டங்கள் செய்து பிறகு தங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளை அரசுக்கு திருப்பி அனுப்பும் போராட்டம் அறிவித்தனர். இதனை அடுத்து புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தற்காலிகமாக கால்வாய் கரையில் பாதை அமைத்து கொடுத்தனர்.

அந்தப் பாதை மழைக்காலங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் கோரிக்கை வைத்து தங்கள் குடும்ப உறுப்பினர்களின் வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளனர்.

தொடர்ந்து பொதுப்பாதை சீரமைக்கப்படாததால் வீட்டிற்கும் பள்ளிக்கும் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்காலிக பாதையை சீரமைத்து தரக்கோரி நேற்று காலை தேசியக் கொடி ஏந்தி வாயில் துணியை கட்டிக் கொண்டு ஊர்வலமாகச் சென்று கீரமங்கலம் மெய்நின்ற நாத சுவாமி ஆலயத்தின் முன்பு உள்ள தலைமைப் புலவர் நக்கீரர் சிலையிடம் மனு கொடுத்துள்ளார்.

ஊர்வலத்தில் தே.மு.தி.க, பா.ஜ.க உள்பட பல கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே மரத்தடியில் தேசியக் கொடி ஏந்தி காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இன்னும் சில நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இதே போல வாயில் துணி கட்டிக்கொண்டு தேசியக் கொடி ஏந்தி தொடர் காத்திருப்பு போராட்டம் செய்ய உள்ளதாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com