மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தேர்வை எழுத, வேட்டி அணிந்து வந்தவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக அவர் தேர்வெழுத அனுமதி அளிக்கப்பட்டார்.
மதுரை திருமங்கலம் அருகே கல்லணையை சேர்ந்தவர் கண்ணன். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியலில் இளங்கலை பட்ட படிப்பை தொலைநிலை கல்வி மூலமாக பயின்றார். மதுரை இறையியல் கல்லூரியில் இன்று தேர்வெழுத வேட்டி கட்டியவாறு சென்ற அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இந்த தகவல் தெரிய வந்ததை அடுத்து புதிய தலைமுறை உடனடியாக செய்தி வெளியிட்டது. அடுத்த 15 நிமிடத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லதுரை கண்ணனை உடனடியாக தேர்வெழுத அனுமதிக்குமாறு தேர்வு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து கண்ணன் வேட்டி கட்டியவாறு தேர்வெழுத அனுமதிக்கப்பட்டார்.