தமிழில் பேசியதால் மாணவிக்கு அபராதம்: தனியார் பள்ளி மீது புகார்
கோவையில் பள்ளி வளாகத்தில் தமிழில் பேசியதற்கு அபராதம் விதித்ததாக தனியார் பள்ளி மாணவி புகார் அளித்துள்ளார்.
செட்டிபாளையம் அருகில் இருக்கும் சக்தி நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மகாலஷ்மி என்ற மாணவி பள்ளி வளாகத்தில் தமிழில் பேசியதற்காக பள்ளி நிர்வாகம் தனக்கு அபராதம் விதித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார். தனது பள்ளியில் உள்ள உடற்கல்வி ஆசிரியர் எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களை தரக்குறைவாக நடத்துவதாகவும் அவர் அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
பள்ளி கழிப்பறையை மாணவர்களே சுத்தம் செய்வதாகவும், இது குறித்து பலமுறை பெற்றோர்கள் முறையிட்டும் பள்ளி நிர்வாகம் கண்டுக்கொள்ளவில்லை என்றும் மாணவி அந்த மனுவில் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி தனது பெற்றோர்களுடன் சென்று துணிச்சலாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.