காவிரி ஆற்றில் ஆசையாக குளிக்க சென்ற மாணவன் - சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு
மயிலாடுதுறை அருகே மூவலூரில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற பதினோராம் வகுப்பு மாணவன் சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை கூறைநாடு பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் இர்ஃபான் ஹஜ் முகமது(16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இர்ஃபான் ஹஜ் முகமது தனது நண்பர்களுடன் சேர்ந்து காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். ஆனால், காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகமாக காணப்பட்டுள்ளது.
அப்போது ஏற்பட்ட திடீர் சுழலில் சிக்கி மாணவன் இர்ஃபான் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் உடலை தேடிக்கண்டுபிடித்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.