கிரிக்கெட் விளையாட்டில் விபரீதம்: பேட் தாக்கிய சிறுவன் கோமா நிலை..
திருச்செங்கோடு அருகே கிரிக்கெட் விளையாட்டின் போது கிரிக்கெட் பேட் நழுவிச் சென்று தாக்கியதில் 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சித்தபூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விஷ்வேஸ்வரன். விட்டம்பாளையம் ஆதிதிராவிடர் நலவிடுதியில் தங்கி 7ஆம் வகுப்பு படித்து வரும் இவர், நேற்று விடுமுறை என்பதால், விடுதி வளாகத்தில் நண்பர்கள் மற்றும் ஆசிரியர் குப்புசாமியுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஆசிரியர் குப்புசாமி கையிலிருந்த கிரிக்கெட் மட்டை நழுவிச் சென்று விஷ்வேஸ்வரனை தாக்கியுள்ளது. இதில் காயமடைந்த மாணவர் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து திருச்செங்கோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட விஸ்வேஸ்வரன், மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு மாணவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விஸ்வேஸ்வரனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

