’சனாதன மரபின் மாபெரும் தெய்வப்புலவர் திருவள்ளுவர்..’ ஆளுநர் ரவி கருத்துக்கு வலுக்கும் கண்டனங்கள்!
சனாதான தர்மம் பற்றி அடிக்கடி பேசி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறள் சனாதன தர்மத்தில் உள்ள தர்மசாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். அதேசமயம், தேசிய கல்விக் கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவர் இருக்கிறார் என்றும், புதிய கல்விக் கொள்கை உருவாகக் காரணமாக திருவள்ளுவர்தான் இருந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சனாதான மரபின் மாபெரும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் என்றும், வைகாசி அனுஷத்தில் திருவள்ளுவர் பிறந்தார் எனவும் தமிழக ஆளுநர் ரவி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் ரவி கருத்துக்கு எதிர்ப்பு..
இந்த நிலையில், திருவள்ளுவர் தொடர்பான ஆளுநரின் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். திருக்குறள் சனாதனத்திற்கும், புதிய கல்விக்கொள்கைக்கும் எதிரானது எனக் கூறியுள்ள திருமாவளவன், ஆளுநர் ஒரு ஆர்.எஸ்.எஸ்-காரர் என்பதால் பாஜகவை வளர்க்க தமிழ், திருக்குறள், பாரதியை சனாதனத்தோடு இணைத்துப் பேசி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
திருக்குறள், திருவள்ளுவர் தொடர்பான ஆளுநரின் பேச்சை கண்டித்துள்ள சபாநாயகர் அப்பாவு, ஆளுநருக்கு திருக்குறளின் ஆழம் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை எனவும், ஆங்கிலேயர்களின் கல்வி முறையை குறைகூறும் ஆளுநர் ரவி, அவர்கள் உருவாக்கிய ஆளுநர் பதவியை வேண்டாம் எனக் கூறுவாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதே போன்று, திருவள்ளுவர் மற்றும் திருக்குறளை சனாதானத்துடன் ஒப்பிட்டு பேசிய தமிழக ஆளுநர் ரவியின் பேச்சுக்கு தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.