நின்றிருந்தவரை உருட்டுக்கட்டையால் தாக்கி நகை; செல்போன் பறிப்பு
வாலிபரை உருட்டுக் கட்டையால் தாக்கி தங்க நகை, செல்போனை பறித்த 2 சிறுவர்களை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை முத்தயால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது சமீர் (21). நேற்றிரவு இவர் படம் பார்த்துவிட்டு வீடுக்குச் செல்வதற்காக நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி நுழைவுவாயில் அருகில், நண்பர்களுக்காக காத்திருந்துள்ளார். அப்போது அந்தப் பக்கம் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் தனியாக நின்றியிருந்த முகமது சமீரிடம், அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன், மற்றும் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை கழட்டி தரும்படி மிரட்டுள்ளனர். சமீர் தர மறுத்ததால் உருட்டுக்கட்டையால் முகமது சமீரை கடுமையாக அடித்து உதைத்து, அவர்களாகவே நகைகளையும் செல்போன் மற்றும் பணத்தையும் பறித்துள்ளனர்.வலியால் துடித்த முகமது சமீர், கூச்சலிட்டதும் பொதுமக்கள் ஓடிவந்து 2 கொள்ளையர்களை பிடித்து அடித்து உதைத்தனர். இருப்பினும் ஒருவர் தப்பி விட்டார்.
பிடித்த 2 பேரையும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். சமீரிடம் இருந்து கொள்ளையடித்த நகை மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 2 பேரையும் கைது செய்து விசாரித்ததில், அம்பத்தூர் ஒரகடத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அம்பத்தூர் புதூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது. இந்நிலையில் தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர். நுங்கம்பாக்கத்தில் கடந்த 14-ம்தேதி அலி என்வரை தாக்கி செல்போன் பறிப்பு சம்பவம் நடந்தது. 15-ம்தேதி தேவராஜ் என்பவரை தாக்கி 5 சவரன் நகைப்பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவங்களுக்கும் தற்போது கைதாகி உள்ள சிறுவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

