பெண்ணுக்கு பாலியல் தொல்லை? காவல் சாமியாக வந்த நாய்! பரபரப்பு பின்னணி என்ன?
செய்தியாளர் - கார்த்திகேயன்
கோவை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், பெட்டிக்கடை ஒன்றிற்கு தீ வைத்துவிட்டதாக, காவல்நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்று தங்களது விசாரணையை தொடங்கினர்.
விசாரணையின் முதற்படியாக, பெட்டிக் கடை அமைந்திருந்த இடத்தில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவை கைப்பற்றிய காவல்துறையினர், அதில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, பெட்டிக்கடைக்கு யார் தீ வைத்தார்கள் என்பதை காட்டிலும், மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடந்திருப்பதை, போலீசார் கண்டறிந்தனர். அதாவது, நள்ளிரவு 2 மணி அளவில், சாலையோரமாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனியாக நின்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த இளைஞரை பார்த்து, ஏற்கனவே அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் குரைத்துக் கொண்டே இருந்தது. அந்த சமயத்தில், அங்கிருந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்த இளைஞர், “இது உங்களுடைய நாயா.. என்னை பார்த்து குரைத்துக் கொண்டே இருக்கிறது” என்று கூறியுள்ளார். இதற்கு, “அது எனக்கு சொந்தமான நாய் கிடையாது. கல்லை எடுத்து அடித்தால் ஓடிவிடும்” என்று அந்த பெண் கூறியதாக சொல்லப்படுகிறது.
இளைஞரும் கல்லை எடுத்து அடித்த பிறகு, சில அடி தூரம் ஓடிய அந்த நாய், மீண்டும் குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. இந்த நிலையில், அங்கு அந்த பெண் தனியாக தான் இருக்கிறார் என்பதை உறுதி செய்துக் கொண்ட இளைஞர், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.
இதனை அறிந்து அந்த பெண் கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து, பாய்ந்து வந்த தெரு நாய், இளைஞரின் கால்களை கடித்து குதறியுள்ளது. காவல் நாயகன் போல வந்த நாயின் தொடர் தாக்குதலால், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பித்து ஓடிய நிலையில், அந்த தெரு நாயும் விடாமல் துரத்தி துரத்தி கடித்துள்ளது.
தற்போது விவரித்த சம்பவங்களை சிசிடிவி கேமராவில் கண்ட போலீசார், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் யார்? என்று தேட தொடங்கினர். அதன் முடிவில், பெண்ணிடம் அத்துமீறியது 17 வயது சிறுவன் என்று தெரிந்ததும், அவனை கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

