இந்திய ஊடகங்கள் மட்டுமின்றி, உலக ஊடகங்கள் அனைத்தும் இன்று, தேமுதிக நிறுவனத் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைந்த செய்திகளையும், அவரது நினைவலைகளையும் பகிர்ந்து எல்லோரையும் கண்ணீரில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், ‘அவர் திரைப்படங்களில் மட்டும் ஹீரோவாகத் தோன்றவில்லை, நிஜத்தில் ஒரு ஹீரோவாக ஜொலித்தார்’ என அவரைப் பற்றி அவருடைய நண்பர்கள் சொன்ன சுவையான பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த வரிசையில் விஜயகாந்த்தின் நண்பரும் நடிகருமான சத்யராஜ் பகிர்ந்த ஒரு சுவையான நினைவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சத்யராஜ், “நடிகர் சங்க கடனைக் கட்டுவதற்காக அவர் எல்லார் வீடுகளுக்கும் சென்றார். அப்போது நடிகை (மறைந்த) மனோரமாவின் வீட்டுக்கும் சென்றுவிட்டு அவர் வெளியில் வரும்போது, அங்கு சென்ற யாரோ ஒரு பெண்ணின் நகையைத் திருடிக்கொண்டு ஒரு திருடன் ஓடினான்.
அதைப் பார்த்து வண்டியில் இருந்து இறங்கி ஓடிப்போய்ப் பிடித்த ஒரே நடிகர் விஜயகாந்த். உண்மையான ரியல் ஹீரோ அவர்தான். மற்ற ஹீரோக்கள் எல்லாம் யோசிப்பார்கள். ஏனென்றால், நிஜமாகப் போய் சண்டையிட்டால், அவன் (திருடன்) நம்மைவிட பலசாலியாக இருப்பான். அதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல், ஓடிப்போய் உதவும் அந்த துணிச்சல் விஜயகாந்துக்குத்தான் இருக்கிறது” என பேசியுள்ளார்.
இப்படி, பல்வேறு தருணங்களில் எதையும் யோசிக்காமல் விஜயகாந்த் செய்த உதவிகள்தான் இன்று பலருடைய இதயங்களையும் கரைய வைத்துள்ளது.