வங்கக் கடலில் வலுப்பெற்றது புயல் சின்னம்.. 4 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, இலங்கையில் கரையை கடக்கவுள்ளது. திருவாரூர், நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. 155 ஆண்டுகளில் 21வது முறையாக வலுப்பெறும் புயல் சின்னம் உருவாகியுள்ளது.
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்ததாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 15 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 860 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்துவரும் இந்த ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு மண்டலம், இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் அம்பாந்தோட்டைமற்றும் கல்முனைக்கு இடையே இலங்கை கடற்கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
காவிரி படுகை மாவட்டங்களுக்கு, இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமையன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 11ஆம் தேதி சென்னையில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய அண்டை மாவட்டங்களுக்கும், அன்றைய தினம் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

