“எங்கள் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை” - ஸ்டெர்லைட்
தங்களது ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் இல்லை என ஸ்டெர்லைட் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியுள்ள நிலையில், அதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளிலேயே அதிகமாக மாசு வெளியிடுவது ஸ்டெர்லைட் தான் என அண்மையில் உயர்நீதிமன்றத்தில் பதிலளித்திருந்தார். அத்துடன் ஸ்டெர்லைட் ஆலை வந்த பின்னர் அங்கு மாசுபாடு அதிகரித்திருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தங்கள் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படவில்லை என ஸ்டெர்லைட் ஆலை சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், “துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களை சமாதானப்படுத்தவே ஆலையை தமிழக அரசு மூடியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கொள்கை முடிவெடுத்ததாக அரசு கூறுவதில் எந்த ஆதாரமும் இல்லை.
ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் இல்லை என கடந்த 2011ஆம் ஆண்டு என்.ஐ.ஆர்.ஐ (NIRI) அமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு காற்று, தண்ணீர் மாசு குறைந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. கடந்த 10 அண்டுகளில் தூத்துக்குடி சுற்றுச்சூழல் நலனுக்காக ஸ்டெர்லைட் ரூ.500 கோடி செலவு செய்துள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.