தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைப்பு: வாகனங்களுக்கு தீவைப்பு
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதோடு போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை இன்று தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி ஏற்கெனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கட்டுள்ள நிலையில் இன்று ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தடை உத்தரவையும் மீறி ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் தடையையும் மீறி ஆட்சியர் அலுவலகம் நுழைந்தனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் முயற்சி மேற்கொண்டு வருவதால் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் உள்ள கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மேலும் போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகமே புகை சூழ்ந்தது போல் காணப்படுகிறது. இதனிடையே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மற்ற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர்.