நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது - ஸ்டெர்லைட் குடியிருப்புகளுக்கு தீவைத்ததாக புகார்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்கு தீவைத்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்த 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 22-ம் தேதி போராட்டத்தின்போது போலீஸ் வாகனங்கள், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புகளுக்கும் தீ வைக்கப்பட்டன.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்கு தீவைத்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது செய்யப்பட்டுள்ளார். கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் வியனரசுவை கைது செய்துள்ளதாக தூத்துக்குடி சிப்காட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி கலவரம் தொடர்பாக இதுவரை 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.