ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..!

ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..!
ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..!
Published on

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுவை தாக்கல் செய்தது.  மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்தும், பசுமைத் தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக இதனை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது. ஆய்வு மேற்கொண்ட அக்குழு சீல் இடப்பட்ட அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது. ஆலையை மூட உத்தரவிட்டது இயற்கை நியதிக்கு முரணானது. முறையாக நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 3 வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்தது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்களது கருத்தை கேட்காமல் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்பதற்காக வேதாந்தா நிறுவனம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com