பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவனையும் பாதித்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவனையும் பாதித்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவனையும் பாதித்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
Published on

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவரும் மீளா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 22ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பல தரப்பில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவரும் மீளா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியை சேர்ந்த சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் விஜயபாலன். பார்வையற்ற மாற்றுத் திறனாளி. பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் படிக்கும் இவர் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர். 500 மதிப்பெண்களுக்கு 457 மதிப்பெண்கள் பெற்று அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்பதே கதிர்வேலின் விருப்பமாக உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் மனதளவில் கதிர்வேலையும் கடுமையாக பாதித்துள்ளது. இதுகுறித்து மாணவர் கூறும்போது, “ நானும் மாவட்ட ஆட்சியரானால் அரசியல் தலையீட்டிற்கு அடிபணியாமல் இதுபோன்ற மிருகத்தனமான செயலை புறக்கணித்திருக்க முடியுமா என்பது தெரியாது. அரசு அதிகாரிகள் எப்போதும் சட்டத்தின்படி எது சரியோ அதனை நிறைவேற்றுவதை நியாபகத்தில் கொள்ள வேண்டும். தூத்துக்குடி மக்களின் கண்ணீரை அரசு சரியாக அரசு கேட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடியிருந்தால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்த்திருக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

கதிர்வேல் பத்தாம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் கணிதத்தில் தோல்வி அடைந்தவர். இருப்பினும் விடா முயற்சி கொண்டு படித்ததில் பொதுத் தேர்வில் சாதித்துள்ளர். இதுகுறித்து மாணவர் கூறும்போது, “ நான் கணிதத்தில் அவ்வளவு சிறப்பானவன் இல்லை. ஆனால் சமூக அறிவியல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடம்” என்றார்.

கதிர்வேலின் நண்பர்கள் கூறும்போது, “ தனக்கு வரவில்லையென்றாலும் ஒவ்வொரு முறையும் கணக்குகளை விடாமல் போட்டுப் பார்ப்பான். ஆனால் கதிர்வேல் சுயநலம் கொண்டவன் அல்ல. எங்களுக்கு கூட அவன் தெரிந்ததை சொல்லித் தருவான்” என தெரிவித்துள்ளனர். கதிர்வேல் அதே பள்ளியில் தனது மேற்படிப்பை தொடர உள்ளார். அத்தோடு தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் தயாராக உள்ளார். “எங்கள் அப்பா அம்மா எனக்கு ஏதாவது அரசு வேலை கிடைத்தால் சந்தோஷம் என நினைக்கிறார்கள். ஆனால் எனக்கோ இந்திய ஆட்சிப் பணியில் அமர்வதுதான் இலட்சியமே” என பூரிப்புடன் கூறுகிறார் கதிர்வேல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com