தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...களமிறங்கியது சிபிஐ
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கடந்த மே 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 100-ஆவது நாள் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் வழக்கு சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்களும் சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அடுத்தகட்ட நடவடிக்கையாக சிபிஐ அதிகாரி சரவணன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியுள்ளது. தூத்துக்குடி சிப்காட், வடபாகம் மற்றும் தென்பாகம் காவல் நிலையத்தில் இருந்து துப்பாக்கிச்சூடு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் சேகரித்ததாக தெரிகிறது. சிபிசிஐடி வழங்கிய ஆவணங்களையும், தூத்துக்குடி காவல் நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் ஒப்பிட்டு பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.