“இரண்டு மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும்” - வேதாந்தா
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இரண்டு மாதங்களில் திறக்கப்படும் என வேதாந்தா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் தடியடி நடத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுவை தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது.
பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்தும், பசுமைத் தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சார்பில் ஆய்வுகள் செய்யப்பட்டு, மீண்டும் ஆலையைத் திறக்க உத்தரவிடப்பட்டது. அத்துடன் மூன்று வாரத்திற்குள் ஆலை இயங்க தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பாணை வெளியிடவும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும் ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்கவும் ஆணையிட்டது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய வேதாந்தா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டிருப்பதாக கூறினார். நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக வந்திருப்பதால் ஆலையைத் திறக்க அரசிடமும் அனுமதி கோரியுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை இரண்டு மாதங்களில் திறக்கப்படும் என அவர் தெரிவித்தார்.