ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் 20 ஆயிரம் கோடி பொருளாதார இழப்பு - தலைமை அதிகாரி ராம்நாத்
தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கூறியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்த மே மோதம் 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. இதுதொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் வேதாந்தா நிறுவனத்தின் காப்பர் ஆலை மூடப்பட்டுள்ளதால் 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராம்நாத் தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், ‘ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் 2 பில்லியன் டாலர்(13,723 கோடி) மதிப்பிலான காப்பர் இறக்குமதி அதிகரித்தது. 1.5 பில்லியன் டாலர்(10,292 கோடி) மதிப்பிலான காப்பரின் ஏற்றுமதியில் இழப்பு ஏற்பட்டுள்ளது. முடிவில் மொத்தமாக ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்கிறார்.
மேலும் அவர், “ஆலை மூடப்படுவதற்கு முன்பாக ஆண்டிற்கு உள்நாட்டு சந்தைக்கு மட்டும் 2,50,000 டன் காப்பரை நிறுவனம் வழங்கி வந்தது. எங்களுடைய வாடிக்கையாளர்களில் நிறைய பேர் தற்போது இறங்குமதி செய்ய வேண்டியுள்ளது.
சுமார் 1,50,000 முதல் 1,60,000 டன் வரையிலான காப்பரை ஆண்டு ஒன்றிற்கு நிறுவனம் ஏற்றுமதி செய்தது. ஆலை மூடப்பட்டதால் சல்பியூரிக் அமிலம் மற்றும் பாஸ்போரிக் அமிலத்தின் விலை உயர்ந்துள்ளது. ஆலை மூடப்பட்ட பிறகு சல்பியூரிக் அமிலத்தின் விலை டன்னிற்கு 4 ஆயிரத்தில் இருந்து 15000 ஆக உயர்ந்துள்ளது. பாஸ்போரிக் அமிலத்தின் விலையும் 20-25 சதவீதம் விலை உயர்ந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

