'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஜிப்சம் உள்ளிட்டவற்றை எடுக்கவும் உடனடியாக அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் நச்சுப்பொருட்கள் வெளியேற்றப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் அது தொடர்பாக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. இதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிராக ஆலை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் பலமுறை நடைபெற்றபோது ஆலையை திறக்க மற்றும் பராமரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்து இருந்தது.
அதேவேளையில் கொரோனா காலத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மட்டும் மேற்கொள்ள தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்த தேவை முடிந்தப் பிறகு மீண்டும் ஆலை முழுமையாக மூடப்பட்டது. இதற்கிடையில் ஆலை நிர்வாகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களை எடுக்கவும் அனுமதி கோரி இடைக்கால மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆலை நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், ''இது மிகவும் அத்தியாவசியமான கோரிக்கை. பராமரிப்பு பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். எனவே இந்த வழக்கை உடனடியாக விசாரித்து இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும்'' என்ற கோரிக்கை வைத்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் இடைக்கால மனு மீது தமிழக அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.
ஜூலை மாதத்தில் குறிப்பிட்ட தேதியில் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என ஆலை நிர்வாகம் சார்பில் கேட்டபோது அது குறித்து நீதிபதிகள் எதுவும் தெரிவிக்கவில்லை
இதையும் படிக்கலாம்: `ராமஜெயம் கொலை குற்றவாளிகள் பற்றி தகவல் சொன்னால் ரூ.50 லட்சம் சன்மானம்’- சிபிசிஐடி போஸ்டர்