யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது: முதலமைச்சர் பழனிசாமி
இனி யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரினார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதியை ஒரு கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் ,ஆலையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், தற்போது தூத்துக்குடியில் வீடு வீடாக சென்று காவல்துறையினர் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் பழனிசாமி,தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக , மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது, இனி யார் நினைத்தாலும் ஆலையை திறக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனைத்து அனுமதியும் ரத்து செய்யப்பட்டு, ஆலை இயங்காதவாறு அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாக கூறினார். விஷமிகள், சமூகவிரோதிகளின் புகைப்படங்களை ஏற்கனவே பேரவையில் தான் காண்பித்தாக கூறிய முதலமைச்சர் பழனிசாமி, பொதுமக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதில் எந்த தடையும் இல்லை , ஆனால் உருட்டு கட்டை, பெட்ரோல் குண்டு வைத்து போராடியவர்கள் பொது மக்களா என வினவினார். இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் நடந்த மாநிலம் தமிழகம் தான் என கூறிய முதல்வர், வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஆதாரத்தோடு கைது செய்யப்படுவதாகவும் பொதுமக்களை கைது செய்யவில்லை என்றும் கூறினார்.
முதல்வரின் விளக்கத்திற்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின் , ஏற்கனவே நீட், ஜல்லிக்கட்டிற்கு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதை போல ஸ்டெர்லைட் ஆலைமூடலுக்கும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறினார். இதற்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், நீட், ஜல்லிக்கட்டு விவகாரங்களுக்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில அரசு முடிவெடுத்தாலே போதும் என கூறினார். அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின் ஆலை நிர்வாகம் நீதிமன்றம் சென்று ஆலையை திறக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் அதனால் தான் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறுவதாக தெரிவித்தார். இதில் அரசு ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால் அரசின் கருத்தை கேட்காமல் உச்சநீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.