சிலை திருட்டு - அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு
தஞ்சை மாவட்டத்தில் உள்ள இரு கோயில்களில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால பஞ்சலோக சிலை திருடப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே ஐஜியாக பணிமாற்றம் செய்யப்பட்ட பொன்மாணிக்கவேலை, மீண்டும் சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் நியமித்தது. இதைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தின் ஸ்ரீ ரங்கராஜபுரத்தில் உள்ள பசுபதீஸ்வரர் மற்றும் இடும்பேஸ்வரர் ஆலயத்தில் இருந்து திருடிச் செல்லப்பட்ட பழங்கால பஞ்சலோக சிலைகள் குறித்த விசாரணை சூடு பிடித்தது. இந்நிலையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் மீது சிலை திருட்டுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை என்றும், இந்த திருட்டு வழக்கில் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.