டிவிஎஸ் தலைவரை கைது செய்யும் திட்டமில்லை - சிலைக்கடத்தல் போலீஸ்
சிலைக் கடத்தல் வழக்கில் டிவிஎஸ் வேணு சீனிவாசனை தற்போதைக்கு கைது செய்யும் திட்டமில்லை என சிலைக்கடத்தல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேக முறைகேடு தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி டி.வி.எஸ். குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கின் விசாரணையின் போது, தற்போது விசாரணை நிலையே நீடிப்பதால் வேணு சீனிவாசனை கைது செய்யும் திட்டமில்லை என்றும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையேற்று கொண்ட நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, வழக்கின் விசாரணையை 6 வாரத்திற்கு ஒத்திவைத்தது.
2004ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடந்தபோது, திருப்பணிக் குழுவின் உறுப்பினராக இருந்தவர் வேணு சீனிவாசன். அப்போது தங்க மயில் காணாமல் போனதாகவும், இதுதொடர்பாக அவர் மீது மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். வேணு சீனிவாசன் மீதான புகார் குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு விசாரிப்பதாக அவர் கூறியிருந்தார். மேலும் மனுதாரர் யானை ராஜேந்திரன், வேணு சீனிவாசனை எதிர்மனுதாரராகவும் சேர்த்திருந்தார்.