100 வருடங்களாக தேடிவந்த அம்மன் சிலை வீட்டு சுவரிலிருந்து மீட்பு

100 வருடங்களாக தேடிவந்த அம்மன் சிலை வீட்டு சுவரிலிருந்து மீட்பு
100 வருடங்களாக தேடிவந்த அம்மன் சிலை வீட்டு சுவரிலிருந்து மீட்பு

மதுரை மாவட்டம் மேலூரில் வீட்டுச் சுவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழமையான திரவுபதி அம்மன் சிலை 100 ஆண்டுகளுக்குப்பின் மீட்கப்பட்டுள்ளது.

மதுரையின் மேலூரில் 500 ஆண்டுகள் பழமையான திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு பூசாரியாக நாராயணன் என்பவரும், அவருக்கு உதவியாக கந்தசாமி என்பவரும் பணியாற்றியதாக தெரிகிறது. நாராயணனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கோயிலில் இருந்த பழமையான திரவுபதி அம்மன் சிலை மற்றும் நகைகளை கந்தசாமி எடுத்துச் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து 1915-ஆம் ஆண்டே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நூறாண்டுகளுக்கு மேல் ஆகியும் திருடு போன சிலை மற்றும் நகைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 

இந்நிலையில் கந்தசாமியின் பேரன் தங்களது பழைய வீட்டுச் சுவற்றில் திரவுபதி அம்மன் சிலை மறைத்து வைக்கப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகத்திடம் கூறியதாக தெரிகிறது. அவர்கள் இதுகுறித்து சிலைக்கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலிடம் தெரிவித்துள்ளனர். அவரது உத்தரவின் பேரில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்ட வீட்டிற்குச் சென்று சிலை ‌இருப்பதாக கூறப்பட்ட சுவற்றை இடித்தனர். 

அப்போது அதற்குள் இரண்டரை அடி உயர திரவுபதி அம்மன் சிலை இருந்தது தெரியவந்தது. உலோகத்தால் ஆன அந்தச் சிலை 700 ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது. சுவற்றுக்குள் சிலை மட்டுமே இருந்தது, நகைகள் இல்லை. சிலையை மீட்ட காவல்துறையினர் நகைகளை தேடி வருகின்றனர். சிலை இருந்த வீடு கந்தசாமி குடும்பத்திடம் இருந்து இரண்டு முறை கை மாறி தற்போது வேறு நபரிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com