அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலை, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று திறக்கப்படுகிறது.
கடந்த 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. அப்போது அங்கு அறிஞர் அண்ணா சிலையை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இதனையடுத்து கருணாநிதியின் மறைவை அடுத்து அவரின் சிலை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்படும் என திமுக அறிவித்தது. அதன்படி அங்கு இருந்த அண்ணா சிலை சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்டு, அந்த சிலையை புனரமைக்கும் வேலை நடந்து வந்தது.
புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும், கருணாநிதி சிலையும் அண்ணா அறிவாலயத்தில் ஒரே இடத்தில், டிசம்பர் 16ம் தேதியான இன்று திறக்கப்படும் என திமுக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அகில இந்திய தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைப்பார்கள் எனவும் திமுக தெரிவித்தது.
அதன்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, விழாவில் பங்கேற்று கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கும் சோனியா காந்தி, அதனைத் தொடர்ந்து ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுகிறார். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் பங்கேற்று, வாழ்த்துரை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு தேசிய தலைவர்கள் வருவதையொட்டி, காவல்துறை சார்பில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் கலந்துகொள்ள ஏற்கெனவே நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விழாவில் ரஜினி பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கருணாநிதி சிலை திறப்பையொட்டி, அண்ணா அறிவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நினைவிடமும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது