வனத்துறையின் 200 ரூபாய் அனுமதி சீட்டு பெற்றே காட்டுக்குள் சென்றோம் : மீட்கப்பட்ட பிரபு வாக்குமூலம்
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு குழுவினர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். 39 பேர் கொண்ட குழுவில் 3 பேர் நீங்கலாக 36 பேர் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்றம் சென்ற 30-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். காட்டுத் தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்றவர்களின் விவரம் தெரியாமல் இருந்த நிலையில் ‘டூர் டி இந்தியா ஹோலிடேஸ்’என்ற நிறுவனத்தை சேர்ந்த பிரபு என்பவர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். திருப்பூரில் இருந்து மலையேற்றத்துக்கு சென்றவர்களை பிரபு தான் அழைத்துச்சென்றுள்ளார்.
காவல்துறையினரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘டூர் டி இந்தியா ஹோலிடேஸ்’ என்ற பெயரில் ஈரோடு திண்டலில் சுற்றுலா அலுவலகம் வைத்துள்ளேன். மார்ச் 10ஆம் தேதி நான் உட்பட 12 நபர்களுடன் சென்னிமலையில் இருந்து அருள் முருகன் டிராவல்ஸ் மூலம் தேனி வழியாக குரங்கணி பகுதிக்கு சுற்றுலா, மலையேற்றத்திற்காக சென்றோம். எங்களுடன் குரங்கணி மலைபகுதியை நன்கு அறிந்த ரஞ்சித் என்ற வழிகாட்டியும் உடனிருந்தார். சோதனை சாவடியில் ரூபாய் 200 செலுத்தி அனுமதி சீட்டு பெற்றோம். கொழுக்குமலையில் இரவில் தங்கியிருந்தோம்.மார்ச் 11 ஆம் தேதி கொழுக்குமலையில் இருந்து குரங்கணிக்கு இறங்கினோம். மதியம் சுமார் 2மணியளவில் காட்டுத் தீ பரவுவதை அறிந்த ரஞ்சித் வேகமாக மலையை விட்டு இறங்க வேண்டும் என்றார். ஆனால் அசம்பாவிதமாக காட்டுத்தீ வேகமாக எங்களை நெருங்கியது. இதனால் நாலாபுறமும் சிதறி ஓட ஆரம்பித்தோம். காட்டுத்தீ அணைந்த பின்னர் குரங்கணி நரிப்பட்டியில் உள்ள மக்கள் , வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீட்டனர். நாங்கள் இருந்த பகுதிக்கு சென்று பார்த்த போது 9பேர்கள் தீயில் கருகி உயிரிழந்திருந்தார்கள். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.