“பொள்ளாச்சி கொடூரத்தில் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்”- நீதிபதி ஜெயச்சந்திரன்
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் வழக்கில் தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காவிடில், மாநில மனித உரிமை ஆணையம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று ஆணைய உறுப்பினர் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் கோவை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளனர். இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களுடன் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இச்சம்பவத்தில் பொள்ளாச்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், இதனால் காவல்துறை முழுமையான விசாரணை செய்யவில்லை என்றும் புகார் எழுந்தது. இதன் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பான வழக்கினை சிபிஐக்கு மாற்றி வெளியிட்ட அரசாணையில், விதிமுறைகளை மீறி பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி ஜெயச்சந்திரன் பேசியபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் தொடர்புடைய அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், நிச்சயம் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காவிடில், மாநில மனித உரிமை ஆணையம் தலையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்றும் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.