அரசு சார்பில் 'தமிழ்நாடு நாள்' இன்று கொண்டாட்டம்
தமிழக அரசு சார்பில், 'தமிழ்நாடு நாள்' முதல் முறையாக மாநிலம் முழுவதும் இன்று கொண்டாப்படுகிறது. இதையொட்டி, தலைமைச் செயலக கட்டடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிக்கிறது.
1956-ஆம் ஆண்டு இதே நாளில், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. 63 ஆண்டுகள் ஆன நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதி 'தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று கடந்த ஜூலை மாதம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நாளை கொண்டாட பத்து லட்சம் நிதியை ஒதுக்கி கடந்த 21-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு வளர்ச்சித்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில், 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படுகிறது. கவியரங்கம், கருத்தரங்கம், இளையோர் அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கவுள்ளனர். தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டத்தையொட்டி, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டபேரவை மற்றும் நுழைவாயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்து புதுச்சேரி விடுதலையான நாளும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம், ஆளுநர் மாளிகை, தலைமை செயலகம் என பல்வேறு அரசு கட்டிடங்கள் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.