கொரோனா: ஸ்டான்லியில் இதுவரை இணைநோய்கள் ஏதும் இல்லாத 16 பேர் உயிரிழப்பு
ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 66 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை முதல்வர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட தகவலின்படி தமிழகத்தில் நேற்று மட்டும் 1,685 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,914 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 798 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 18,325 உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 1,243 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 24,545 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 307 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 66 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், ''உயிரிழந்த 66 பேரில் 16 பேருக்கு இணைநோய்கள் ஏதும் இல்லை.50 பேருக்கு கொரோனா தொற்றுடன் இணை நோய்களும் இருந்தன. தொற்று பேரிடர் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற பொய்யான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்'' என அவர் தெரிவித்துள்ளார்