கீழடியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்
கீழடியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “கீழடியில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழ்வாய்வில், தமிழர்கள் இலக்கியத்திலும் எழுத்துக் கலையிலும் 2600 ஆண்டுகளுக்கு முன்னரே வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர் என்பதை, மறுக்கமுடியாத சான்றாகத் தெரிய வந்துள்ளது.
இந்திய வரலாற்றையே, இனி தமிழர்கள் வரலாற்றிலிருந்து தான், முன்னோக்கி பார்க்க வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
கீழடியில், நான்காவது முறையாக நடத்தப்பட்ட அகழ்வாய்வின் கண்டு பிடிப்புகள், கரிம மாதிரிகள் உள்ளிட்டவைகள், அமெரிக்காவிலும், இத்தாலியிலும் உள்ள புகழ் வாய்ந்த சோதனை கூடங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில், வேளாண் தொழில்களில் காளைகள் - மிருகங்களை, தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் கலாச்சார பாரம்பரிய நிகழ்வுகள், வேளாண் சமூக அமைப்புகள் அப்போதே இருந்து வந்துள்ளதற்கான தேவையான அனைத்து சான்றுகளும், அந்த அகழ்வாய்வின் கண்டுபிடிப்பில் இருந்ததாகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப் பட்டவைகளை வைப்பதற்காக, உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப் பட வேண்டும். இது குறித்து மாநிலங் களவையிலும், தற்போது மக்களவையிலும், நாடாளுமன்ற கழகக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்.
கீழடிக்குப் பிறகு அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலம் சனோவ்லி என்கிற இடம் பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதைப்போல கீழடி அகழாய்வுப் பகுதியும் பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வரும், வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே இருக்கும் சென்னை மண்டல அலுவலகத்துடன் தென் தமிழகத்திற்காக, மதுரையிலும், தொல்லியல் துறை அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
கீழடியில், அகழாய்வுப் பணிகள் துவக்கப்பட்ட அதே கால கட்டத்தில், குஜராத் மாநிலம் வாட் நகரிலும் அகழாய்வுப் பணி தொடங்கப்பட்ட நிலையில், அங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட திட்ட மிட்டுள்ளதைப் போல, கீழடியிலும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை, பார்வைக்கு வைக்க அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டும்.
எனவே, கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க உதவிட அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; மதுரையில் தொல்லியல் துறையின் சார்பில் கிளை அலுவலகம் ஏற்படுத்த வேண்டும்; கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்” என அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.